சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாதிரியாரின் வெறிச்செயல்!
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையை சேர்ந்த 14 வயது சிறுமி ஆற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் விடுமுறை தினங்களில் வழக்கமாக அருகே உள்ள தேவாலயத்திற்கு சென்று வந்துள்ளார்.
இவ்வாறு கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமி தேவாலயத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது, பாதிரியார் ரகுராஜ்குமார் (வயது 54) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், சிறுமி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனை கவனித்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். சிறுமி கூறியதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல்துறையினர், பாதிரியார் ரகுராஜ்குமார் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், பாதிரியார் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.