கடத்தப்பட்ட 287 மாணவர்கள் விடுவிப்பு!
நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான கடுனாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் 287 போ் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
குரிகா நகரத்தில் உள்ள பாடசாலையில் வைத்து 287 குழந்தைகளை ஆயுதக் குழுவினா் கடந்த மாா்ச் 7 ஆம் திகதி கடத்தினா்.
இந்நிலையில், எவ்வித காயமுமின்றி அந்தக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்களில் பெரும்பாலானோா் 12 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவா்கள். நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள ஆயுதக் குழுக்கள், அப்பகுதி கிராமவாசிகளிடம் மிரட்டி பணம் பறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.
பாடசாலை மாணவர்களை கடத்தி, அவா்களை விடுவிக்க பெருந்தொகையைக் கோருவது தொடா்கிறது. கடந்த 2014 லிருந்து சுமாா் 1,400 பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனா். கடத்தல்காரா்கள் கேட்கும் தொகையை குழந்தைகளின் பெற்றோா் வழங்கிய பிறகு அல்லது அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு குழந்தைகள் விடுவிக்கப்படுகின்றனா்.
இதனால், கடத்தல்காரா்கள் மீதான கைது நடவடிக்கை அரிதாக உள்ளது.