இலங்கையில் குறைக்கப்பட்ட வங்கி வட்டி வீதங்கள்!
வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கான சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் முதலீடு செய்ய பல்வேறு உலக நாடுகள் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த காலத்தில் பணவீக்கம் நூற்றுக்கு 70 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. அதனை நிவர்த்தி செய்வதற்கு மத்திய வங்கியிடம் காணப்பட்ட மாற்றுவழி வங்கி வட்டியை அதிகரிப்பது மாத்திரமே.
அதனை செயற்படுத்தியதன் ஊடாகவே இன்று பணவீக்கத்தை எம்மால் விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. இன்று நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 5 வீதமாக காணப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் காரணமாக இன்று நாடு கட்டம் கட்டமாக மீண்டு வருகின்றது.
பல முதலீட்டாளர்கள் இன்று நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். அத்துடன் இன்று வட்டி வீதங்கள் குறைப்பதற்கான சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அனைத்து துறைகளும் பொறுப்புடன் சரியாக இயங்கும் பட்சத்தில் விரைவாக மூலதன சந்தையை வழமைக்கு கொண்டுவர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.