OOSAI RADIO

Post

Share this post

பூஜையின் போது ஏன் மணி அடிக்க வேண்டும்?

இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமானது மணி அடித்து வழிபடுவது. கோவில்களில் பூஜை நடத்தப்படும் போது கண்டிப்பாக மணி அடிக்கப்படும்.

அதே போல் பக்தர்கள், கோவிலில் வலம் வந்து வணங்கிய பிறகு கோவிலில் தொங்க விடப்பட்டுள்ள மணியை அடித்து, தெய்வங்களை வணங்கி, தங்களின் வேண்டுதலை முன்வைப்பது வழக்கம். இந்துக்கள் எதற்காக பூஜையின் போது மணி அடிக்கிறார் என்ற காரணத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கோவிலில் மணி அடித்து வழிபாடு நடத்துவதன் பின்னணியின் ஆன்மிக காரணம் மட்டுமல்ல, அறிவியல் காரணமும் உள்ளது.

இது மனிதர்களின் உடலில் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தெய்வங்களை அழைப்பதற்காக இவ்வாறு மணி அடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

மணியை அடிக்கும் போது அதில் இருந்து எழும் ஒலி, ஓம் என்ற தெய்வீக ஒலியை உருவாக்குகிறது. இந்த ஒலியை அந்த இடம் முழுவதும் நேர்மறை அதிர்வலைகள் உருவாகின்றன. மணி ஓசை என்பது தெய்வங்களின் ஆன்மிக இருக்கையாக கருதப்படுகிறது.

கோவிலுக்கு வரும் மனிதர்களின் எண்ணங்களில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை, இந்த மணி ஓசை நீக்கி விடுகிறது.

அது மட்டுமல்ல மணியில் இருந்து உருவாகும் கூர்மையான ஒலி, மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை சீராக செயல்பட வைக்கிறது.

வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ள மணியில் இருந்து எழுப்பப்படும் ஒலியானது மனித மூளையின் வலது மற்றும் இடது மடல்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூளையானது சீராக செயல்படுகிறது.

கோவில்களில் இருக்கும் மணிகள் இறை தன்மையை தனக்குள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் பூஜைகளின் போது அந்த மணியை ஒலிக்கும் போதும் தீய சக்திகள் விரட்டப்பட்டு, தெய்வீக தன்மை அந்த இடம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.

தீய எண்ணங்கள், தீய சக்திகள் ஆகியவற்றை உடலில் இருந்து அகற்றும் சக்தி மணி ஓசைக்கு உண்டு. ஆலயத்தில் கோவில் மணி ஒலிக்கும் போது நம்முடைய கவனம், சிந்தனை ஆகியவை வேறு பக்கம் செல்லாமல் தடுக்கும்.

ஒரு அதிர்ச்சி உணர்வை அளித்து, நம்மை நிகழ்காலத்துடன் ஒன்றி இருக்க செய்யும் ஆற்றல் மணி ஓசைக்கு உண்டு. கோவில் மணியானது காதுகளுக்கு இதமான உணர்வை தந்து, மனதையும் ஆன்மாவையும் அமைதி பெற செய்கிறது.

இதனால் ஒரு விதமான நிம்மதி, புத்துணர்ச்சி நமக்குள் ஏற்படுவதை உணர முடியும். நம்முடைய உள்உணர்வு, சுயம் ஆகியவற்றை தெய்வத்துடன் இணைய வைக்க உதவுகிறது.

கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் பூஜையின் போது மணி அடிக்கப்படுவதால் துர்சக்திகள் விரட்டப்படுகின்றன. அவற்றை விரட்டிய பிறகு வீட்டில் தெய்வீக தன்மை நிறைய செய்ய இது உதவுகிறது.

மணியில் இருந்து எழுப்பப்படும் ஓசை நம்முடைய மூளைக்குள் ஏழு விநாடிகள் இருப்பதாக அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது. இந்த ஏழு விநாடிகளில் ஏழு சக்கரங்கள் தூண்டப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

மனதில் தூய்மையான எண்ணங்கள் நிறைவதற்கும் மணியோசை உதவுகிறது.

Leave a comment

Type and hit enter