OOSAI RADIO

Post

Share this post

உடம்பு சூட்டை குறைக்க சிறந்த வழிகள்!

கோடைக்காலத்தில் ஒருவர் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு உடலை நீரேற்றத்துடன் மற்றும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீங்கள் உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுகிறீர்களா?

அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அதிகமாக உட்கொண்டு வாருங்கள். இதனால் உடல் சூட்டை விரைவில் குறைப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இந்த பழங்களை கோடைக்காலத்தில் உட்கொண்டு வந்தால், அது உடல் சூட்டைக் குறைப்பதோடு, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. கூடுதலாக இதில் உள்ள வைட்டமின் சி, வெயிலால் சந்திக்கும் சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

கோடையில் அதிகம் கிடைக்கும் ஒரு நீர்ச்சத்துள்ள உணவுப் பொருள் தான் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், கோடையில் வெள்ளரிக்காயை அதிகம் உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் தடுக்கப்படும் மற்றும் உடல் சூடும் குறையும்

கோடை வெயிலால் சந்திக்கும் உடல் சூட்டைத் தணிக்க இளநீர் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இளநீரில் குளிர்ச்சி பண்புகள் அதிகமாக உள்ளன. இவை கொளுத்தும் வெயிலால் அதிகரித்த உடல் சூட்டை எதிர்த்துப் போராட உதவி புரியும். எனவே உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடித்து வந்தால், சட்டென்று உடல் சூட்டைக் குறைக்கலாம்.

இளநீரைப் போன்றே கற்றாழையிலும் குளிர்ச்சிப் பண்புகள் உள்ளன. கோடையில் உடல் சூட்டினால் அவதிப்படும் போது, கற்றாழை ஜூஸைக் குடிப்பதைத் தவிர, அதன் ஜெல்லை சருமத்தில் தடவி வந்தால், உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் கற்றாழையில் ஏராளமான மருத்துவ பண்புகள் இருப்பதால், இதன் ஜூஸைக் குடிக்கும் போது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

கோடைக்காலத்தில் விலைக் குறையில் அதிகம் விற்கப்படும் ஒரு பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், இதை வெயில் காலத்தில் அதிகம் உட்கொள்ளும் போது, உடல் சூடு குறைவதோடு, உடலும் நீரேற்றத்துடன் இருக்கும். மேலும் தர்பூசணி பழமானது உடலில் இருந்து நச்சுக்களை அடிக்கடி சிறுநீரை கழிக்கத் தூண்டி வெளியேற்றுகிறது. எனவே உடல் சூட்டினால் அவதிப்படும் போது தர்பூசணி பழத்தை சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.

நிறைய பேர் வெங்காயம் உடல் சூட்டை அதிகரிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் வெங்காயமானது குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது. இதில் உள்ள அதிகப்படியான க்யூயர்சிடின் தான் உடலை குளிர்ச்சியாக்குகிறது. அதுவும் வெங்காயமானது அதிக வெப்ப அலையின் காரணமாக சந்திக்கும் வெப்ப வாதத்தை தடுக்க உதவுகிறது. எனவே கோடையில் உடல் சூட்டைக் குறைக்க வெங்காயத்தைக் கொண்டு தயிர் பச்சடியை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்.

Leave a comment

Type and hit enter