Share this post

மஹிந்த பிரதமரான ‘அரசியல்’ கதை!

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்து வருகின்றனர்.
2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர்.
இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் நான்காம் பாகம் இது.
1994 இல் ஜூனில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் ஆட்சியமைத்தார் சந்திரிகா.
எதிர்பார்த்தபடியே மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரானார். ஆனால், அவர் எதிர்பார்த்த அமைச்சரவை வேறு. கிடைத்த அமைச்சரவை வேறு. அவர் எதிர்பார்த்தது விவசாய அமைச்சகத்தை. ஆனால், சந்திரிகா அவருக்கு தொழிலாளர் மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சகத்தை வழங்கினார். விவசாயத் துறை கிடைத்தால், தனது தொகுதியில் செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ள அது உதவியாக இருக்குமெனக் கருதினார் மஹிந்த.
இருந்தபோதும், தொழிலாளர் துறையை ஏற்றுக்கொள்ளும்படி தான் அவரை வலியுறுத்தியதாகக் கூறுகிறார் குஷால் பெரேரா.
தொழில்துறையை ஏற்றுக்கொண்ட பிறகு, என்ன செய்வது என்று யோசித்த மஹிந்தவுக்குக் கிடைத்தது, தேசிய தொழிலாளர் சாசனம். உற்சாகத்துடன் அதனை உருவாக்குவதில் பணியாற்ற ஆரம்பித்தார் மஹிந்த.
ஆனால், அந்த காலகட்டத்தில் புலிகள் அமைப்புடன் சந்திரிகா துவங்கியிருந்த பேச்சு வார்த்தை சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததால், மஹிந்த மீதான ஊடக கவனம் குறைவாகவே இருந்தது. இதற்கிடையில் 1994 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றிபெற்றார் சந்திரிகா.
இருந்தபோதும் தொழிலாளர் சார்ந்து பல யோசனைகளை முன்வைத்தபடி இருந்தார் மஹிந்த. இவையெல்லாம் சேர்ந்த மஹிந்த ஒரு முற்போக்கான அமைச்சர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. இது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
1997 இல் ஜெனீவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டிற்காக மஹிந்த சென்றிருந்தார். அவர் ஜெனீவாவில் இருந்தபோதே, அவரிடமிருந்து தொழிலாளர் துறை பறிக்கப்பட்டது. கடற் தொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறையின் அமைச்சராக்கப்பட்டார் மஹிந்த.
சந்திரிகாவின் இந்த நடவடிக்கையால் மஹிந்த சற்று சோர்வடைந்தாலும், தனக்களிக்கப்பட்ட அமைச்சகத்தின் மூலம் மக்களை எந்த அளவுக்கு சென்றடைய முடியும் என்று யோசித்து செயல்பட ஆரம்பித்தார் மஹிந்த. இந்த காலகட்டத்தில் அவரது அரசியல் சிங்கள – பௌத்த அரசியலாக தீவிரமாக உருவெடுத்தது.
1999 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார் சந்திரிகா குமாரதுங்க. இந்தத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இருபது பேர் கொல்லப்பட்டனர். எதிர்பார்த்ததைப் போலவே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்டார் சந்திரிகா குமாரதுங்க.
இதற்குப் பிறகு, தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அளிக்கக்கூடிய புதிய அரசியல் சாஸனத்தை உருவாக்கி அதனை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்பினார் சந்திரிகா குமாரதுங்க. இதற்கு எதிர்பார்த்ததுபோலவே பௌத்த பிக்குமார்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
மஹிந்தவும் இந்த புதிய அரசியல்சாஸனத்தை ஏற்கவில்லை என்கிறார் குஷால் பெரேரா. “இந்த அரசியல்சாஸனம் நிறைவேறினால் நான் எனது மக்களிடம் செல்ல முடியாது” என மஹிந்த தன்னிடம் கூறியதாக தனது Rajapaksa – The Sinhala Selfie நூலில் குறிப்பிடுகிறார் அவர்.
இந்த அரசியல் சாஸனம் பாராளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டால், மஹிந்த எதிர்ப்பார் என்று செய்தி பரவிய நிலையில், அந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேயில்லை. இதற்குப் பிறகு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே மீண்டும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றியது.
ஆனால், ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்களில் பாராளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு, 2001 இல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிக்க, எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த. இந்த காலகட்டத்தில், பெரிய சலசலப்புகளை ஏற்படுத்தாதவராகவே இருந்தார்.
தமிழ்ப் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வுகளை அளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால், 2004 ஏப்ரலில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி வெல்ல, தன் ஆதரவாளரான ரத்ன ஸ்ரீ விக்ரமசிங்கேவை பிரதமராக்க விரும்பினார் சந்திரிகா. ஆனால், பௌத்த பிக்குகளின் ஆதரவு மஹிந்தவுக்கே இருந்தது.
முடிவில், தனக்கு விருப்பமில்லாத நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் சந்திரிகா குமாரதுங்க. 2004 இன் இறுதியில் இலங்கையின் கடற்பகுதிகளைத் தாக்கிய சுனாமி, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இதற்காக அமைக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளில் புலிகள் அமைப்பையும் இணைத்துக் கொள்வது தொடர்பாக கட்சிகளுக்குள் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன.
முடிவில், சுனாமி நிவாரணப் பணிகளில் புலிகள் அமைப்புடன் இணைந்து செயல்படுவதற்கான கதவுகள் மூடப்பட்டன. மேலும், அடுத்த ஜனாதிபதியாக தீவிர சிங்கள ஆதரவு மனநிலை கொண்டவரே வரவேண்டுமென்ற மனநிலையும் நாட்டின் தென்பகுதியில் உருவானது.
2005 ஆகஸ்ட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதையடுத்து, போர் நிறுத்தத்திற்கு எதிரான ஒரு மன நிலையையும் தீவிர புலிகள் எதிர்ப்பு மன நிலையையும் சிங்கள அரசியல் சக்திகள் மத்தியில் உருவாக்கியது.
சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தபோது, அவரது குடும்பத்திற்குள் அவர் முன்னிறுத்தக் கூடிய வகையில் யாரும் இல்லை. முடிவில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடியவரா மஹிந்த ஒருவரே தென்பட்டார்.
(பிபிசி தமிழ்)

Recent Posts

Leave a comment