இலங்கையில் பெற்றோலுக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்!
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது.
இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்வதாகவும், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது.
அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.
இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.