அதிக வருமானத்திற்கு வரி!
இலங்கை மக்களின் இறுதிக்காலத்திலும் வங்கிகளில் வைப்பு தொகைகளை மட்டுப்படுத்திவிட்டு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வட்டி வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டுமென கேட்பது கேவலமான விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகள் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் சேமலாபா நிதியை வங்கியில் வைப்பு செய்துவிட்டு அதிலிருந்து வரும் வட்டி வருமானத்தை வைத்து வாழ்பவர்கள் அதிகம் எனவும் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், இலங்கையில் தமது இறுதி காலத்தில் சிரேஷ்ட பிரஜைகளால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது. வயது முதிர்ந்த காலத்தில் மருத்துவ செலவிற்கு அதிக பணம் தேவைப்படும்.
இலங்கையில் மக்கள் வாழுகின்றபோதும், உழைக்கின்ற போதும் வரி செலுத்த வேண்டும் அதேபோன்று ஓய்வில் இருக்கின்ற போதும் வரி செலுத்த வேண்டும்.
ஆனால் ஏனைய பெரும்பாலான நாடுகளில் மக்களின் ஓய்விற்கு பின்னர் அவர்களின் மறைவு வரை அவர்களின் வாழ்க்கையை தமது கையில் எடுத்து இறுதி காலத்தை ஒழுங்காக கவனிக்கிறார்கள்.
ஒரு பொருளாதாரத்தை சரியாக முகாமைத்துவம் செய்ய முடியாத கூட்டம் ஒன்று நாட்டை ஆட்சி செய்கின்ற காரணத்தினால் எப்படி ஒரு நல்லாட்சி நடைபெற வேண்டும்,எவ்வாறு ஒரு ஆட்சி நடைபெற வேண்டும் என்ற வரையறைகளை மீறிய நிலையில் இலங்கையின் பொருளாதாரம் சென்று கொண்டிருக்கின்றது.
இலங்கை அரசிற்கு வருமானம் வேண்டும் இல்லையென்றால் இந்நிலையிலிருந்து மீள முடியாது என கூறுவார்கள். இதனால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகின்றது என கூறியுள்ளார்.