Post

Share this post

பிரதமரின் அடுத்த காய் நகர்த்தல் ஆரம்பம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்வரிசை தலைவர்களில் 5 பேரை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிப்பதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 5 பேரை பதவி விலக செய்து, அவர்களுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் நிலையில், பிரதமராக பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடியாது என்ற காரணத்தினால், அமைச்சரவைக்குள் அவரது பலமிக்க பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதாலும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் இருந்து பேசப்பட்டு வந்த தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் விடயம் முன்வைக்கப்பட்டிந்தது.
இதனிடையே புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தவிர மேலும் 18 பேர் அங்கம் வகிப்பார்கள் என நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 அமைச்சு பொறுப்புகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 அமைச்சு பொறுப்புக்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சில அமைச்சு பொறுப்புக்களும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் புதிய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையும் 18 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமாக இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment