விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்கும் சூர்யா!
அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க செயல் தலைவர் ஆர்.ஏ.ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரசியலில் சூர்யா
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். தொடர்ந்து, வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் ரசிகர் மன்றத்தைப் பலப்படுத்தி அரசியலில் இறங்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.அந்த வகையில், திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க செயல் தலைவர் ஆர்.ஏ.ராஜ் தலைமையில், மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அதில், அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க மாநிலப் பொருளாளர் ஹரி, மாவட்டத் தலைவர் குணா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வார்டு வாரியாக நற்பணி இயக்கத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், புதிய பொறுப்பாளர்களை நியமித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கில இந்திய சூர்யா நற்பணி இயக்க செயல் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் நடிகர் விஜயைத் தொடர்ந்து சூர்யாவும் அரசியலுக்கு வருவதற்கு முன்னேற்பாடாக இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அது காலத்தின் கட்டாயம், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. என்றார்.