வானில் விபத்தில் சிக்கிய விமானம் – ஒருவர் பலி, பலருக்கு காயம்!
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர்.
விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை. விபத்து தொடர்பான ரேடார் பதிவுகளில், விமானம் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று நிமிடங்களில் 31,000 அடிக்குக் கீழே இறங்கியது. பின் அங்கிருந்து வேகமாக இறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இதுவரை இதுவரை மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.