இலங்கையில் ஜூலை முதல் புதிய நடைமுறை!
நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது.
வருமான வரி சட்டத்தின் 123 (8) சரத்திற்கு இணங்க வருமான வரி திணைக்களம் மூன்றாவது தரப்பினரின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்குள்ள உரிமையை செயற்படுத்துவது மாத்திரமே இதன் மூலம் இடம்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.