இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் 18 வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ந் திகதி முதல் கடந்த 1 ந் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.
மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2 ந் திகதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2 ந் திகதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது.
இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் பற்றி உடனடியாக அறிவிக்கப்படும்.