Starlink இணைய சேவைக்கான கட்டண விபரம்!
இலங்கையில் ஸ்டார்லிங் (Starlink) இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்களை வரை செலுத்த வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாதாந்தக் கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குகிறது.
இதேவேளை இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இணைய சேவை வசதிக்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இணைய சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கோபுரங்கள் ஊடாக வழங்கப்பட்ட குறைந்த அளவிலான இணைய வசதிகளுக்குப் பதிலாக, இந்த செய்மதி தொழில்நுட்ப இணைய வசதி மூலம் எங்கிருந்தும் இணைய வசதியைப் பெற முடியும்.
இதன் ஊடாக தொழில்நுட்பத் துறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள், ஆய்வாளர்கள், கடற்றொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த இணையதள வசதி பெரும் வசதியாக அமையும் எனவும் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
Courtesy: Sivaa Mayuri