பசும் பாலுக்கு தடை!
அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு பசும் பால் விற்பனைக்கு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் அதன் மாகாணங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிற நிலையில் அவை மாடுகளை அதிகம் பாதித்துள்ளமையினால் கறந்த பச்சை பாலை அருந்தவும், விற்பனை செய்யவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மெக்சிகோவில் உயிரிழந்ததுடன் அதனை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு மாகாணங்களிலுள்ள கறவை பசுக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அந்நாட்டு வேளாண்மைத்துறை அறிக்கையின்படி அங்குள்ள 82 மந்தைகளில் பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கறந்த பாலை அருந்துவதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் முன்னரே தடை விதித்துள்ளது.
எனினும் ‘மனித நுகர்வுக்கு அல்ல’ என்ற பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படும் பாலை, பல்வேறு தேவைகளுக்காக மனிதர்கள் அருந்துவது தொடர்ந்து வருகிறது.
மேலும், பச்சை பாலின் பல்வேறு பயன்பாடுகளிலும் பேஸ்டுரைஸ் (Pasteurize) செய்வதை எஃப்டிஏ (FDA) கட்டாயமாக்கி உள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் அறிவுறுத்தலையடுத்து பல்வேறு உலக நாடுகளும் கறந்த பச்சை பாலை அருந்துவதை தடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.